இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்

தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்

தொகுத்து வழங்கியது: மு.சாதிக்

சர்வ புகழும் வல்ல இரட்சகனுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் இறைவனின் தூதர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகுக என வேண்டியபின்:

சில கிறிஸ்தவ சகோதரர்கள், இயேசு பற்றி குர் ஆனின் கருத்தென்ன? என்ற கேள்வியைக் கேட்டனர். அதற்குப் பதிலளிக்கும் நோக்கத்தோடும், பொதுவாக ஏனைய சகோதரர்களும் பிரயோசனம் அடைவர் என்ற நல்ல நோக்கமும்தான் இத்தகவல் வெளியிடக் காரணம்.

குர்ஆனின் கருத்துக்களுடன் பைபிளின் கருத்துக்களும் ஆதாரங்களோடு மிகச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இது இத்தொடரின் முதலாம் பகுதியேயாகும். இதன் தொடர்கள் இறைவனின் உதவியுடன் தொடராக வெளிவரும் (அவன் நாடினால்).

1 - இயேசு ஒரு மனிதரே !

குர்ஆனில்:

"(வானவர்கள்) மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையின் மூலம் உனக்கு (ஒரு பிள்ளையை) நன்மாராயம் கூறுகிறான், அவரின் பெயர் மஸீஹ்-மர்யமின் மகன் ஈஸா (இயேசு) என்பதாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மிக்க அந்தஸ்துடையவராகவும் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவரகளிலொருவராகவும் இருப்பார்" என்று கூறியபோது -

"அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போதும் (தந்தாயின் பரிசுத்தத்தையும்) பருவ வய்திலும் (தன் நபித்துவத்தைப் பற்றியும்) மனிதர்களுடன் பேசுவார். மேலும் அவர் நல்லொழுக்கமுடையவராகவுமிருப்பார்" (என்றும் கூறினர்).

"(அதற்கு மர்யம்) "என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" என்று கேட்டாள், (அதற்கு) "அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான், அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் "ஆகுக!" என்பதுதான், உடனே அது ஆகிவிடும்" என்று (அல்லாஹ் கூறினான்".

"மேலும் அவன், அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்றாத்தையும் இஞ்ஞீலையும் கற்பித்தான், "இஸ்றாயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான்) (அவர் வாலிபத்தை அடைந்தபின் இஸ்றாயீலின் மக்களிடம்) "நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன், உங்களுக்காக களி மண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்து, பின்னர் அதில் நான் ஊதுவேன், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும். பிறவிக் குருடனையும் வெண்குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். மேலும் அல்லாஹ்வின் அனுமதியோடு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். மேலும் நீங்கள் புசிப்பவற்றையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் விசுவாசம் கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்) (3:45-50)

"மேலும் (இயேசுவை நிராகரித்த) அவர்கள், சதிசெய்தனர் (அவரைக் கொல்வதற்கு). அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதிசெதுவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்து கூலி கொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்."

(இயேசுவை நோக்கி) "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திக் கொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மைப் ப்ரிசுத்தமாக்கி வைப்பவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமைநாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கிறேன்." என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்வீராக!) (3:4-55).

"நிச்சயமாக அல்லாஹ்விடம், ஈஸா(இயேசு)வுக்கு உதாரணாம், ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன், அவரை(ஆதமை) மண்ணால் படைத்து பின் அதற்கு (மனிதனாக) "ஆகுக" என்று கூறினான், அவர் (அவ்வாறு) ஆகிவிட்டார்."

"(நபியே! ஈஸா(இயேசு)வைப் பற்றிய  இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும், ஆகவே (இதைப்பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்". (3:59-60).

மேலே நாம் குறிப்பிட்டுக் காடடிய குர்ஆனிய வசனங்க்ளில், இயேசு ஒரு மனிதரென்றும், அவரின் தாயின் பெயர் மர்யம் எனவும், இயேசுவை கடவுள் அவனுடைய "குன்" எனும் வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும், அவர் சிறுவயதிலேயே தனது தாயின் பரிசுத்தம் பற்றியும், பருவ வயதை அடைந்தபின், தனது நபித்துவம் பற்றியும் பேசினார் எனவும், அவருக்கு இறைவன் அளித்திருந்த சில அற்புதங்கள் போன்ற பல விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, அவவரைப் பற்றிய வேறுபல செய்திகளையும் பல்வேறு இடங்களில் குர்ஆன் தெரிவிக்கின்றது. அவற்றை அவ்வப்போது சுருக்கமாக நாம் பார்க்கலாம்.

பைபிளில்:

கிறிஸ்தவ மதத்தின் சில வேதநூற்களான மத்தேயு, முர்குஸ், லூக்கா, யோவான், பர்னாபா போன்ற சகல பைபிள்களும் இயேசு ஒரு மனிதனே என்றும், (மனிதனுக்கு ஏற்படுகின்ற) பசி, தாகம், தூக்கம், மறதி, மரணம் (கிறிஸ்தவ சகோதரர்களின் நம்பிக்கையின் பிரகாரம்) போனற சகல விசயங்களும் அவருக்ககும் ஏற்பட்டன எனவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது இப்படியிருக்க, இயேசுவையே கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், கடவுளே அல்லது கட்வுளின் மகனே சிலுவையில் அறையப் பட்டதாகவும் நம்புவது எப்படி நியாயமாகும்?

2 -  இயேசு கடவுளின் தூதரே!.

குர்ஆனில்:

"மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் மகனோ) இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்றுவிட்டனர்". (5:75).

பைபிளீல்:

")இயேசு தனது சீடர்களிடம்) "யார் உங்களை (பிரச்சாரத்தை) ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் என்னை ஏற்றுக் கொண்டார். யார் என்னை ஏற்றுக் கொண்டாரோ அவர் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை) ஏற்றுக் கொண்டார்" என்று கூறினார். (மத்தேயு 40:10)

"இயேசு, தனது சீடர்களைப் பல பட்டினங்களுக்கும், பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, உங்களுக்கு செவி மடுப்ப்வர் யாரோ, அவர் எனக்குச் செவிமடுத்து (வழிபட்டு)விட்டார்; யார் உங்களை இழிவாக்கினானோ, அவன் என்னை இழிவாக்கிவிட்டான், எவன் என்னை இழிவாக்கினானோ, அவன் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை)யே இழிவாக்கிவிட்டான்" என்று கூறினார் (லூக்கா 16:10). இதைத் தவிர லூக்கா(43:4), யோவான்(34:4, 3:17) போன்ற பல இடங்களில், தான் ஒரு தூதரேயென்றும், (கடவுளோ, கடவுளின் மகனோ அல்ல என்வும்) தனது இறைவனே தன்னைத் தூதராக அனுப்பினான் எனவும் தெளிவாகவே இயேசு பிரச்சாரம் செய்தார் என்பது விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

3 - இயேசு, பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராகும்!

குர்ஆனில்:

"இஸ்ரவேல் மக்களுக்கே (அவரை) ஒரு தூதராக (அனுப்பினோம்)..."(3:49).

பைபிளில்:

 ஒரு தடவை கன்ஆன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இயேசுவிடம் வந்து, தனது பைத்தியம் பிடித்த மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியபோது, "நான் வழிகெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை (மட்டுமே) நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இயேசு கூறிவிட்டார். (மத்தேயு 24:15)

இயேசு தனது சீடர்களை, யூத பட்டினங்களுக்கு பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, "சாமிரிய்யீங்களின் பட்டினத்தினுள்ளோ, வேறு சமூகங்களின் பட்டினத்தினுள்ளோ நீங்கள் போகாதீர்கள், வழி கெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை சீர்செய்வதற்காக சுதந்திரமாக நீங்கள் செல்லுங்கள்" என்று சொன்னார். (மத்தேயு 5:10)

இதிலிருந்து பனூ இஸ்ரவேலர்காளுக்கு மட்டுமே இயேசு தூதர் என்பதையும், ஏனையோருக்கு அவர் தூத்ராக அனுப்பப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

4 - இயேசு, கடவுளை மட்டுமே வணங்கவேண்டும், அவனுக்கு யாரையும், எதனையும் இணையாக்கக் கூடாது என்றே பிரச்சாரம் செய்தார்!.

குர்ஆனில்:

(இயேசு) 'நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழியாகும் (என்று கூறினார்)'. (3:51)

பைபிளில்:

"உனது கடவுளுக்கு மட்டுமே சிரம்தாழ்த்தி அவனை மட்டுமே நீ வணங்கு" என்று, இயேசு மக்களுக்குக் கட்டளையிட்டார் (மத்தேயு 10:4)

கடமைகளிலும், உபதேசங்களிலும் முதன்மையானது எதுவென இயேசுவிடம் கேட்கப்பட்டபோது "இஸ்ரவேலர்களே! கேளுங்கள்!! உபதேசங்களிலெல்லாம் மிக முதன்மையானது, இரட்சகனான எமது கடவுள், ஒரே ஒருவன்தான் என்பதும், உனது இரட்சகனாகிய உனது கடவுளை முழுமையாக நேசிப்பதுவுமாகும்" என பதிலளித்தார். (முர்குஸ் 29:12).

5 - மூஸா நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராகவும், அதனைப் பூரணப் படுத்துவற்காகவுமே இயேசு வந்தார்!.

குர்ஆனில்:

"மேலும், என்முன் இருக்கும் தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவனாகவும், உங்களுக்கு விலக்கப் பட்டவைகளில் சிலவற்றை, நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடனும் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, எனக்கும் கட்டுப்படுங்கள்". (3:50).

பைபிளில்:

"நாமூஸாயோ, அல்லது ஏனைய நபிமார்கள் கொண்டு வந்த(மார்க்கத்)தையோ செயலிழக்கச் செய்வதற்காக நான் வரவில்லை, மாறாக அதனைப் பூரணப்படுத்துவதற்காகவே நான் வந்தேன் என இயேசு கூறினார்" (மத்தேயு 17:5).

இதைத் தவிர இன்னும் பல இடங்களில் குர்ஆனிய  உண்மைகள், பைபிளில் விபரிக்கப்பட்டுள்ளன. எனவே, உண்மையைத் தேடுவோம், அதனை விளங்குவோம், அதனை ஏற்போம், அதன்பால் அழைப்போம். வல்ல இரட்சகன் நம்மனைவருக்கும் நேரான வழிகாட்டுவானாக!

 

       

உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு அறிமுகம் செய்ய