அபூ அப்துர்ரஹ்மான

இன்றைய முஸ்லிம்கள் பெரும் தொகையினர் தர்கா மாயையில் சிக்கி கத்தம் பாத்திஹா, மௌலூது, கந்தூரி போன்ற சடங்குகள் என்று மூழ்கியுள்ளனர். தர்ஹா என்ற பெயரில் இறந்தவர்களின் அடக்கஸ்த்தலங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு முஸ்லிம்கள் தர்ஹாக்களை கட்டி நிரப்பி இருக்கிறார்கள். ஒரு சில ஊர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தர்ஹாக்கள் இருப்பதையும் காணலாம். அதே போல் மாதம் ஏதாவது ஒரு அவுலியாவின் பெயரால் மௌலூதோ, பாத்திஹாவோ ஓதத் தவறுவதில்லை. இஸ்லாமிய மாதங்களை நபி (ஸல்) கற்றுத் தந்த முறைப்படி நமது பெண்கள் சொல்லுவதில்லை. மாறாக ரசூலுல்லாஹி மௌலூது பிறை, அப்துல் காதிர் ஜீலானி மெலலூது பிறை, நாகூரார் மௌலூது பிறை என்று சரளமாக கூறும் அளவிற்கு முஸ்லிம் பெண்களிடம் தர்ஹா மோகம் மலிந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் முல்லாக்கள் தங்களின் சுய நலம் காரணமாக முஸ்லிம் பெண்களை படிப்பறிவு இல்லாமல் ஆக்கியதுதான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? பெண்களுக்கு நாலு எழுத்து எழுதத் தெரிந்தால் காதல் கடிதம் எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தி பெண்களை படிக்காத மக்களாக ஆக்கிவிட்டார்கள். அவர்களின் உள்நோக்கம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்தால் தான் மூடச்சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு மதி மயங்கச் செய்து அவை மூலம் கை நிறைய பொருள் திரட்டலாம் என்பதே. கிறிஸ்தவ புரோகிதரர்கள் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள் என்று அல்லாஹ் 9:34 வசனத்தில் கூறியிருப்பதுபோல் முஸ்லிம் புரோகிதரர்களும் முஸ்லிம்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். அப்படிப்பட்ட மூடச் சடங்குகளில் தான் தர்ஹா- சமாதிச் சடங்குகள் அவுலியாக்கள் கபுறுகளில் உயிருடன் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு போய் கேட்பதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறார்கள். உங்களது எல்லா தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்து தருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள் என்று தவறான உபதேசம் செய்து பெண்களை சாரை சாரையாக படை எடுக்க வைத்துள்ளனர். நபி (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிக்கு தொழ வந்து கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு ஒருநாள் என்று முறை வைத்து நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கம் கற்றுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதையோ, மார்க்கம் கற்றுக் கொள்வதையோ அல்லாஹ்வோ அவனது தூதரோ தடை செய்யவில்லை. ஆனால் இன்று பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்து யிருக்கிறார்கள். இவர்களின் அசல் நோக்கம் பெண்கள் பள்ளியுடன் தொடர்புடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு மார்க்க அறிவு ஏற்பட்டு விடும்; மூடச் சடங்குகளை கொண்டு பெண்களை ஏமாற்றி பிழைக்க முடியாது. பெண்கள் எந்த அளவு அறிவு சூன்யங்களாக இருக்கிறார்களோ அந்த அளவு அவர்களை மூடச் சடங்குகளில் அவர்களை மூழ்கடிக்க முடியும் என்பதேயாகும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கு வருவதால் அவர்களின் ஒழுக்கம் சிதைகிறது என்று காரணம் இவர்கள், தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதேபோல் தர்ஹாக்களுக்குச் செல்லுவதையும் தடை செய்ய வேண்டுமல்லவா? பெண்களின் ஒழுக்கக் கேடுகளுக்கு பள்ளி வாசல்களைவிட தர்ஹாக்களே அதிகமாக இடமளிக்கின்றன. பெண்களின் ஒழுக்கத்தில் அக்கறைக் கொண்டு அவர்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் இந்த முல்லாக்கள் பெண்கள் தர்ஹாக் களுக்கு வருவதை அதைவிட கடுமையாக எதிர்க்க வேண்டுமே? அதற்கு மாறாக பெண்கள் தர்ஹாக்களுக்கு வருவதை ஆதரிப்பதின் மர்மம் என்ன? ஆக முஸ்லிம்களிடம் தர்ஹா சடங்குகள் பெருக முழு முதல் காரணமாக இருக்கிறார்கள். வலிமார்கள் மாநாடுகள் நடத்தி தர்ஹா சடங்குகளை ஆதரிக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தியாயம் 18:102 106 வசனத்தில் 102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சிததப்படுத்தி வைத்திருக்கின்றோம். 103. (தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. 104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் தான். 105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். 106. அதுவே அவர்களுடைய கூலியாகும் (அதுதான்) நரகம் ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். இந்த இறை வசனங்களை காட்டி முஸ்லிம்களை தர்ஹா சடங்குகளை விட்டும் தவிர்த்து கொள்ளுமாறு உபதேசம் செய்தால் என்ன சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு அல்ல என்று லேசாகக்கூறி முஸ்லிம்களை ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு குற்றத்தை முஸ்லிம் செய்தாலும் குற்றம் தான்; காஃபிர் செய்தாலும் குற்றம்தான் என்ற சாதரண உண்மை கூட தெரியாதவர்களாகவா இந்த முல்லாக்கள் இருக்கிறார்கள். காஃபிர் திருடினால் குற்றம்; முஸ்லிம் திருடினால் குற்றம் இல்லை. காஃபிர் சாராயம் குடித்தால்தான் குற்றம் முஸ்லிம் சாரயம் குடித்தால் குற்றம் இல்லை; காஃபிர் விபச்சாரம் செய்தால் குற்றம் முஸ்லிம் விபச்சாரம் செய்தால் குற்றம் இல்லை என்று இவர்கள் கூறுவார்களா? இல்லயே! குற்றங்களை யார் செய்தாலும் குற்றவாளிகள் தான்; தண்டனைக் குறியவர்கள் தான் என்ற சாதரண உண்மை கூட இவர்களுக்கு தெரியாதா? ஆதி மனிதர் ஆதம்(அலை) ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா?

முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் காஃபிர்கள் ஆனார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா? அத்தியாம் 18: 102-106 ல் கூறப்படும் கண்டனங்கள் காஃபிர்களுக்காக இறங்கியது என்கிறார்களே அந்த காபிர்கள் யார்? அந்த குறைஷிகள் யார்? இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் நேரடி வாரிசுகள் காஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்ஸா என்று அழகிய இஸ்லாமிய பெயர்களை உடையவர்களாக இருந்தார்கள். சுன்னத் செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி பேசினார்கள். வருடா வருடம் ஹஜ் செய்தார்கள். தான தர்மம் செய்தார்கள். இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொன்டார்கள். இவர்களின் அகராதிப்படி இன்றைய இந்திய முஸ்லிம்களைவிட பன்மடங்கு உயர்வான முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.           

அப்படிப்பட்ட முஸ்லிகளைப் பார்த்தே அல்லாஹ் காஃபிர் என்று கூறி எச்சரிக்கிறான் என்பதை இந்த முல்லாக்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் தங்களை இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாறாக அவுலியாக்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள், சிபாரிசு செய்வார்கள் என்று நம்பியே தர்ஹா சடங்குகளைச் செய்து வந்தனர். அல்குர்ஆன் 18:10, 18:102-106, 39:3 ஆகிய இறை வசனங்களை ஓதினால் சிந்திப்பவர்களுக்கு உண்மை விளங்கும். இஸ்லாத்திலிருந்து குஃப்ர் தோன்றுகிறதேயல்லாமல் குஃப்ரிலிருந்து இஸ்லாம் தோன்றவில்லை. என்பதை உணர்வார்களாக. இந்த அடிப்படையில்தான் இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷிகள் உண்மையில் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டுதான் அல்லாஹ்வின் அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக்கி அவர்களின் சமாதிகளில், சிலைகளுக்கு முன்னால் தங்களின் வேண்டுதல்களை வைத்து, அதன் காரணமாக அல்லாஹ்வால் காஃபிராக்கப்பட்டார்கள். அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைத்தால், அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு, மன்றாட்டம் செய்பவர்களாக ஆக்கிக் கொண்டால், இப்றாஹீம்(அலை) அவர்களின் சந்ததிகள் காஃபிராக்கப்பட்டது போல் இவர்களும் காஃபிராக்கப்படுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? எனவே 18:102-106 வசனங்கள் காபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ளவேண்டாம். முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் "தர்ஹா மாயை"யை விட்டு விடுபட்டு படைத்த இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

                                                                                                             

Refer this page to your friends / relatives

Home Page