நிலவேம்பு கஷாயம் பன்றி காய்ச்சலை தடுக்கும்

நிலவேம்பு கஷாயம் மூலம் பன்றி காய்ச்சல் நோயை தடுக்க முடியும் என்று ‘மூலிகைமணி’ டாக்டர் வெங்கடேசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புகையிலை, மது, மாமிசம் சாப்பிடுகிறவர்களை பன்றி காய்ச்சல் விரைவாக தாக்கும்.

1950, 1980ல் இப்படிப்பட்ட விஷக்காய்ச்சல் வந்தபோது நிலவேம்பு கஷாயம் வழங்கி, தமிழக அரசு நோயை தடுத்தது. தற்போது பன்றி காய்ச்சல் அச்சுறுத்துவதால், சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சித்த மருத்துவ வல்லுனர் குழு அமைத்து ‘உடனடியாக மறந்து போன மூலிகை கஷாயங்களை மீண்டும் தயாரித்து விநியோகிக்க வேண்டும்’ என்றார்.

பன்றிக் காய்ச்சலை பொருத்தவரை சித்த மருத்துவ நூலில் விஷக்காய்ச்சல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிலவேம்பு, விஷ்ணுகரந்தை, பற்பாடகம், சீந்தில் கொடி, ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, மிளகு, கிராம்பு தூள் செய்து கலந்து, வயிறு காலியாக இருக்கும்போது மூன்று வேளை குடித்தால் 5 நாளில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம் பக்கவிளைவு கிடையாது.

சிக்கன்குனியா வந்தபோது இதே மூலிகையை மாநில அரசு அங்கீகரித்து, எல்லா அரசு சித்த மருத்துவமனைகளிலும் வழங்கியது. வெளிநாட்டில் இருந்து பெறப்படும் ஒரே மருந்தை நம்பாமல், இங்குள்ள மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.